பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரி; தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு

3

புதுடில்லி: பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.



இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அது போதாது என்று ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முன்வைத்து மேலும் 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரியை அவர் விதித்தார்.


டிரம்பின் வரி அறிவிப்பால் இந்திய ஜவுளித்துறையில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பினர், தொழில்துறையினர், பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.


பிற நாடுகளில் இருந்து இந்திய ஜவுளித்துறையினர் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான 11சதவீத வரியை ரத்து செய்யுமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலினும் வலியுறுத்தி இருந்தார்.


இந்நிலையில், பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆக.19ம் தேதி முதல் (அதாவது இன்றிலிருந்து) செப்.30 வரை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீதான வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement