துணை ஜனாதிபதி தேர்தல்; சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்கு மோடி வலியுறுத்தல்

18


புதுடில்லி: துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் தேஜ கூட்டணி கட்சி எம்பிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அவரை தேஜ கூட்டணி எம்பிக்கள் வரவேற்றனர். கூட்டத்தில் தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனை மோடி அறிமுகம் செய்தார்.

Tamil News
அப்போது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து, கிரண் ரிஜிஜூ நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சி.பி.ராதா கிருஷ்ணனை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.

துணை ஜனாதிபதி பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் மிகவும் நல்ல பெயர். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் எந்த சர்ச்சையிலும் சிக்காத நபர். அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்திற்கும் நாட்டிற்காக உழைத்துள்ளார்.

அத்தகைய ஒருவர் நாட்டின் துணை ஜனாதிபதியானால், அது நாட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயமாக இருக்கும். ராஜ்நாத் சிங்கும் அனைத்து கட்சியினருடன் ஆதரவு கோரி பேசி வருகிறார்.

துணை ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றாக ராதாகிருஷ்ணனை ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். அது நமது ஜனநாயகத்திற்கும், நமது நாட்டிற்கும், ராஜ்யசபாவை நடத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement