பீஹாரை தொடர்ந்து ஒடிசாவிலும் அடுத்த மாதம் சிறப்பு தீவிர திருத்த பணிகள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2

புவனேஸ்வர்: பீஹாரை தொடர்ந்து ஒடிசாவிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



பீஹாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


இந் நிலையில் பீஹாரைத் தொடர்ந்து ஒடிசாவிலும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரி கோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:


2024 சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி பிஜூ ஜனதாதளம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அனைத்து விளக்கங்களையும் அளித்துவிட்டது.


நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைமுறைகள் மட்டும் செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடும் வகையிலோ அல்லது பொதுமக்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அசைக்கவோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற முடியாது.


ஒடிசாவில் அடுத்த மாதம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கும். வீடு, வீடாக சென்று இந்த திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பின்னர், 2026ம் ஆண்டு ஜன.7ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


வாக்காளர் பட்டியலில் துல்லியம், வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்துவதே சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் நோக்கம்.


இவ்வாறு கோபாலன் கூறி உள்ளார்.


ஒடிசாவில் 24 ஆண்டுகள் கழித்து தற்போது தான் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நடைமுறை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement