சட்ட விரோதமாக நடக்கும் ஆபாச பார்கள்; புதுச்சேரியில் வலுக்கிறது எதிர்ப்பு!

5


புதுச்சேரி: 'அரைகுறை ஆடையுடன் வந்தால் பெண்களுக்கு நுழைவுக்கட்டணம் கிடையாது; அனுமதி இலவசம் என்று அறிவித்து சட்ட விரோதமாக பார்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய ரெஸ்டோ பார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.


சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சில்லரை மது விற்பனை கூடங்கள் மற்றும் பார்கள் 233 இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகள் இரவு 10:30 மணிவரை இயங்கி வந்தது. இந்நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு 212 ரெஸ்டோ பார்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இந்த பார்கள் நள்ளிரவு 12 மணி இயங்கவும், பாடல் இசைக்கவிட்டு மது பிரியர்கள் நடனமாடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் இத்தகைய பார்கள் திறக்கப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் சுற்றுலாவை ஊக்குவிக்கவே இப்படி பார்கள் திறக்கப்பட்டதாக அரசு கூறி வந்தது. இந்நிலையில் ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் செயல்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. காதை செவிடாக்கும் அளவிற்கு பாடல்களை ஒலிக்க விட்டு, ஆட்டம் போடுவதால் பார் சுற்று வட்டார குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அபராதம்



இப்பிரச்னை பூதாகரமாகியதை தொடர்ந்து, அப்போதைய கவர்னர் ராதாகிருஷ்ணன், விதிகளை மீறி நள்ளிரவு 12 மணியை தாண்டி இயங்கும் ரெஸ்டோ பார்களின் உரிமத்தை 3 மாதம் ரத்து செய்வதோடு, ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார்.



நள்ளிரவில் ஆய்வு



புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்ட்டோ பார்களில் கலால்துறை தாசில்தார் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பிட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை செய்ய கூடாது. மதுக்கடைகளில் நேரத்தை குறிக்கும் வகையில் பெரிய சைஸ் போர்டு பார்வையாளர்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என, உத்தவிடப்பட்டது.



விதிகளை மீறி நள்ளிரவில் இயங்கிய 13 ரெஸ்டோ பார்களை கலால் அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். அனுமதி நேரத்தை கடந்து இயங்கிய 14 ரெஸ்டோ பார்களின் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்



இந்நிலையில், கலாசார சீரழிவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அரைகுறை ஆடை



இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
ஆட்சியாளர்களுக்கு வேண்டிய ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் அரசின் எந்த துறையின் அனுமதியும் பெறாமல் பாடல்களை ஒலிக்க விட்டு, அரைகுறை நடனம், ஆண், பெண் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

ஜோடியாக வந்தால்...!




இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு கட்டணமாக ஆண், பெண் இருவரும் ஜோடியாக வந்தால் ரூ. 3000, ஆண் மட்டும் வந்தால் ரூ.2000 வசூலிக்கின்றனர். அது மட்டுமின்றி, அரைகுறை ஆடையுடன் வரும் பெண்ணுக்கு கட்டணம் கிடையாது.


இலவசமாகவே அனுமதிக்கின்றனர். இது கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. எனவே, அனுமதியின்றி நடன நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும். இப்படி நிகழ்ச்சி நடத்தும் ரெஸ்டோ பார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
''இத்தகைய பார்களில் முறையாக வரி வசூலித்தால் ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் அரசுக்கு வரி வந்திருக்கும். ஆனால், ஊழல் காரணமாக, வரியே வசூலிக்கப்படுவதில்லை,'' என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பறிபோன உயிர்!



புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாரில், கடந்த 9ம் தேதி நள்ளிரவில் நடந்த தகராறில் சென்னை கல்லுாரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து, கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில், கலால் தனிப்படை குழுவினர் பார்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், நேரக் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement