த.வெ.க மாநாடு: தி.மு.க - பா.ஜ மீது கடும் விமர்சனம்; அதிமுக மீது கரிசனம்!

19


மதுரை: தமிழக அரசியல் களத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு எப்போதுமே மவுசு இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் எம்ஜிஆர். அவரை தொடர்ந்து, அதிமுகவுக்கு தலைமையேற்ற ஜெயலலிதாவுக்கும் மக்கள் ஆதரவை அள்ளிக் கொடுத்தனர்.அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், விஜயகாந்துக்கும் மக்கள் ஆதரவு கிடைத்தது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.


இவர்களை போலவே அரசியலுக்கு வந்த மற்ற நட்சத்திரங்களுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. வெற்றிடம் இருப்பதாகக்கூறி அரசியலுக்கு வருவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினி, உடல் நிலையை காரணம் காட்டி பின் வாங்கி விட்டார்.

விஜய் மீது எதிர்பார்ப்பு
இத்தகைய சூழ்நிலையில்தான், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இளைய தலைமுறை ரசிகர்களை அதிகம் கொண்டவர் என்பதால், விஜய் தொடங்கிய கட்சி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கருதுகின்றனர்.


தன் கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திய விஜய், 'கூட்டணிக்கு யாரேனும் கட்சிகள் வந்தால், அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளத்தயார்' என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் அறிவித்தார். பாஜ, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிலர், விஜய் தங்கள் கட்சிக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தனர்.

மாநாட்டில் விஜய் பேச்சு

எனினும் கூட்டணி எதுவும் இதுவரை உருவாகவில்லை. இத்தகைய சூழ்நிலையில் இன்று மதுரையில் கட்சியின் இரண்டாம் மாநாட்டை நடத்தினார் விஜய். அதில், தன் கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டை விஜய் அறிவித்தார்.


'பாசிச பாஜவுடன் கூட்டணிக்கு சேர நாம் என்ன ஊழல் கட்சியா' என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த கூட்டணி, பொருந்தாக்கூட்டணி என்றார்.
''எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது? அப்பாவி தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர்,'' என்று அதிமுக தலைமை பற்றி பட்டும் படாமலும் விமர்சனத்தை முன் வைத்தார். திமுக - பாஜவை பற்றியும், பிரதமர், முதல்வர் பற்றியும் கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுக பெயர் குறிப்பிடாமல் மட்டுமே பேசினார்.


மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜூனாவும், அதிமுக -பாஜ கூட்டணியை விமர்சித்தார். பின்புற வாசல் வழியாக பாஜவை அழைத்து வருவதாக பேசினார்.

Advertisement