போதைக்கு எதிரான போரில் தமிழகம் முதலிடம் என ஸ்டாலின் நகைச்சுவை; அன்புமணி கிண்டல்

4

சென்னை: போதைக்கு எதிரான போரில் தமிழகம் முதலிடமா?முதல்வர் ஸ்டாலினின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா? என்று பாமக தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும், போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்படுவோரின் விகிதம் அதிகரித்திருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர் மாயஉலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அவருக்கு களநிலைமை எதுவும் தெரியவில்லை என்பதையே அவரது இந்தக் கருத்து உறுதிப்படுத்துகிறது.


தமிழகத்தில் போதைப்பொருள்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாக எந்த அடிப்படையில் முதல்வர் கூறுகிறார் என்றால், காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் கூறுகிறாராம். கள நிலவரம் தெரியாமல், அதிகாரிகள் அளிக்கும் புள்ளி விவரங்களைக் கண்ணை மூடிக் கொண்டு நம்புவது தான் முதல்வரின் வாடிக்கையாகவும், பலவீனமாகவும் உள்ளது.


தமிழகத்தில் போதைப் பொருள்களில் நடமாட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அதிகாரிகள் அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. கஞ்சா போதையில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. இவை எதையும் அறிந்து கொள்ளாமல் அதிகாரிகள் கூறுவதை அப்படியே திருப்பிக் கூறுவது பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ஒரு லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனரின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதில் பெருமையடைய எதுவும் இல்லை. ஒரு லட்சம் கிலோ கஞ்சா பிடிபட்டிருக்கிறது என்றால், ஒரு கோடி கிலோவுக்கும் கூடுதலான கஞ்சா பிடிபடாமல் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.


போதைப்பொருள் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் அதிகரித்து விட்டதாகக் கூறும் தமிழக காவல்துறை தான் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் போதை வியாபாரத்தை நடத்தி வந்ததையும், தமிழ்நாட்டின் வழியாக போதைப் பொருள்களை கடத்தி வந்ததையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.


தமிழகத்தின் தலையாய பிரச்னையாக இன்று உருவெடுத்திருப்பது போதைப் பொருள் வியாபாரம் தான். இதையெல்லாம் உணராமல் தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறைந்துவிட்டதாக முதல்வர் கூறுவதைப் பார்க்கும்போது, அவரது நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இது போன்று நகைச்சுவை செய்வதை விடுத்து தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்க உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறி உள்ளார்.

Advertisement