தவெக மாநாட்டில் உடைத்தெறியப்பட்ட 10,000 பிளாஸ்டிக் சேர்: போர்க்களம் போல் காட்சியளித்த மைதானம்

10

மதுரை: தவெக மாநாட்டில் நடிகர் விஜய்யை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதால் 10,000 பிளாஸ்டிக் சேர் உடைந்து சேதமானதாக ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடைந்த சேர்களால் அந்த மைதானமே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.



மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்து தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், அங்கு போடப்பட்டிருந்த ஏராளமான பிளாஸ்டிக் சேர்கள் சேதப்படுத்தப்பட்டன.


மாநாட்டில் தொண்டர்கள் அமருவதற்காக தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் கேரளாவில் இருந்தும் பிளாஸ்டிக் சேர்கள் கொண்டு வரப்பட்டன. இந் நிலையில் மாநாடு முடிந்த பின்னர், தொண்டர்களுக்காக போடப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான சேர்கள் உடைந்த நிலையில் காணப்பட்டன.


ஏராளமான தடுப்புகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. எங்கு பார்த்தாலும் உடைந்த நாற்காலிகளின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.


திண்டுக்கல்லில் இருந்து வாடகைக்கு எடுத்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான இருக்கைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் கவலையுடன் கூறி உள்ளனர்.


அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது;


மொத்தம் 20000 பிளாஸ்டிக் சேர் கொண்டு வந்தோம். கிட்டத்தட்ட 3000 சேர் உடைந்து விட்டன. விஜய் வரும் போது அவரை பார்ப்பதற்காக அனைவரும் சென்ற போது இவை உடைந்திருக்கின்றன.


ஒரு சேர் விலை 400 ரூபாய். கிட்டத்தட்ட 3000 பிளாஸ்டிக் சேர் என்று கணக்கு போட்டு பார்த்தால் ரூ.1,20,000 நஷ்டமாகிவிட்டது. மாநாட்டில் மட்டுமே மொத்தமாக கணக்கிட்டால் 10,000 பிளாஸ்டிக் சேர் சேதம் அடைந்திருக்கும். இது குறித்து தவெக நிர்வாகிகளிடம் பேசி உள்ளோம். பாதிப்பை ஈடுகட்டுவதாக கூறி இருக்கின்றனர்.


இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Advertisement