பொன்முடியின் பேச்சு வீடியோ போலீசிடம் கேட்கிறது கோர்ட்

2

சென்னை:சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

பொன்முடியின் பேச்சு, வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருவதாக கூறி, தாமாக முன்வந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, முகாந்திரம் இல்லை என, காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டது,'' என கூறி, அது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'புகார்களில் முகாந்திரம் இல்லை என்று, எந்த அடிப்படையில் காவல் துறை முடிவுக்கு வந்தது' என, கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''கடந்த 1972ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துகளையே, முன்னாள் அமைச்சரும் குறிப்பிட்டு பேசினார். அது, அவரின் கருத்துகள் அல்ல. அதுதொடர்பான வீடியோவை முழுமையாக பார்த்தால், அந்த விபரங்கள் தெரியவரும்,'' என்றார்.

இதையடுத்து நீதிபதி, 'பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவையும், கடந்த 1972ம் ஆண்டு, அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுகளின் விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்' என, காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தார்.

Advertisement