நகர்ப்புற நிலவரித் திட்டத்தில் தனிப்பட்டா வழங்க ஏற்பாடு

மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளில் வருவாய் பதிவேடுகளில் உள்ள பதிவுகளை இன்றைய நிலையில் மேம்படுத்தவும் (அப்டேட்), நில உரிமைதாரர்களுக்கு பட்டா வழங்கவும், மாவட்ட வருவாய் நிர்வாக பராமரிப்புக்கென நிலஆவணங்களைத் தயாரித்து அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பணிகள் துவங்கி 13 மாநகராட்சிகள், 65 நகராட்சிகளில் வருவாய் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு துாய நில ஆவணங்கள் பராமரிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் நிலஅளவை, முன்பிருந்த 'அ' பதிவேட்டில் கிராம நத்தம் அல்லது நத்தம், வீடு, வீட்டுமனை என பதிவு செய்யப்பட்டு இருக்கும். அது நகர நிலஅளவை பதிவேட்டில் சர்க்கார் புறம்போக்கு அல்லது அரசு மனை என்று இருக்கும்.

அதேசமயம் அந்நிலத்தின் அடங்கல் சான்றில் அது நத்தம் புறம்போக்கு என்றும், 'குறிப்பு' என்ற பகுதியில் நிலஉடைமை தாரர் பெயர் அல்லது வீடு, வீட்டுமனை என்று பதிவாகி இருக்கும். இவைதான் கணினியில் இடம் பெற்றிருக்கும். இதனால் இந்த அடங்கல் உள்ளவர்களால் நீண்ட காலமாக அங்கு குடியிருந்தும் தங்கள் நிலம், வீடு, மனையை விற்பனையின் போது பதிவு செய்யவோ, கடன் பெறவோ, வீடுகட்ட அனுமதி பெறவோ இயலாது.

இச்சிரமத்தை போக்க அரசு கடந்த ஆக.8 ல் நத்தம் நிலவரித் திட்டத்தை மேற்கொண்டு, நிலஉடைமைதாரர் பெயரில் பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகவலை அனைத்து கலெக்டர்களுக்கும் அரசு அனுப்பியுள்ளது. இதன்படி கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்படி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் முன்பு கிராம நத்தம் அல்லது புறம்போக்கு என்று இருப்பதை வகை மாற்றி, வீடு, மனை உடைமைதாரர்களின் பெயருக்கே தனிப்பட்டா (ரயத்பட்டா) என்று வகைப்பாடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement