இரண்டு தாள்களாக 5 மணி நேரம் நடைபெறும் சுருக்கெழுத்துத் தேர்வு ; கூடுதல் இடைவெளி நேரம் தேவையென எதிர்பார்ப்பு

மதுரை : 'இன்று 2 தாள்களாக நடைபெறும் சுருக்கெழுத்துத் தேர்வு நீண்ட நேரம் நடைபெறுவதாகவும், ஒரு தேர்வுக்கும் மற்றொரு தேர்வுக்கும் போதிய இடைவெளி நேரம் அவசியம்' என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் தட்டெழுத்து, சுருக்கெழுத்துப் பயிற்சிக்கான தேர்வுகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கு இத்திறன் அவசியம் என்பதால் இதனை பலர் படித்து சான்றிதழ் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வர். சுருக்கெழுத்துத் தேர்வை தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேரும், தட்டச்சுத் தேர்வை 2 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.

இந்தாண்டுக்கான தேர்வு இன்று (ஆக.,23) துவங்குகிறது.

முதல்நாளில் சுருக்கெழுத்து (தமிழ்) தேர்வு சீனியர் எனும் 2ம் தாள் தேர்வு காலை 8:30 மணிக்கு துவங்குகிறது. மதியம் 11:15 மணிக்கு முடிவடைகிறது. பின்னர் 15 நிமிட இடைவெளிக்குப்பின் ஜூனியர் எனும் முதல்தாள் தேர்வு 11:30 மணிக்கு துவங்கி மதியம் 1:25 மணி வரை நடக்கிறது.

அவர்கள் கூறுகையில், 'சுருக்கெழுத்து தேர்வு 5 மணி நேரம் வரை நடைபெறும். இதில் ஒருதாளுக்கும், மற்றொரு தாளுக்கும் இடைவெளி வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. தேர்வர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இந்தநேரம் போதுமானது கிடையாது.

தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்போர் புத்துணர்வு பெற குறைந்தது அரைமணி நேரமாவது தேவை' என்றனர்.

மதுரை மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் சங்கச் செயலாளர் பாலசங்கர நாராயணன் கூறுகையில்,

''இருதேர்வுகளுக்கு இடையே குறைந்த இடைவெளி விடுவதால் மாணவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். அவர்களுக்கு போதிய அவகாசம் தேவையென இயக்குனரகம் அளவில் முயற்சித்தோம். இதுவரை கிடைக்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Advertisement