' அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும்தான் போட்டி' திடீர் சாம்பார், திடீர் ‛பாஸ்ட் புட்' மாதிரி விஜய் என கிண்டல்

மதுரை : ''அ.தி.மு.க., பற்றி விஜய் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.,விற்கும்தான் போட்டி'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.

மதுரையில் நடந்த த.வெ.க., 2வது மாநில மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், 'எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி இன்று எந்த நிலைமையில் உள்ளது. அதை கட்டி காப்பது யார். அக்கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வெளியே சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர்' என்று பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்ததை மறைமுகமாக சாடினார்.

இதற்கு பழனிசாமி முதல் கட்சி நிர்வாகிகள் வரை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.மதுரையில் உதயகுமார் கூறியதாவது: விஜய் தற்போது தி.மு.க.,வை 'பாய்சன்' என்கிறார். கடந்த மாநாட்டில் 'பாயாசம்' என்றார். அடுத்த மாநாட்டில் அமுது என்று கூட சொல்வார். தி.மு.க., எனும் தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., தொடங்கினார். அண்ணாதுரையை அரசியல் ஆசானாக நினைத்தார்.

எம்.ஜி.ஆரை ஜெயலலிதாவும், அவரை பழனிசாமியும் அரசியல் ஆசனாக நினைத்து அ.தி.மு.க.,வை வழிநடத்துகின்றனர். ஆனால் மாநாட்டில் விஜய் தனக்கு யார் அரசியல் ஆசான் என்று சொல்லவில்லை. அ.தி.மு.க., பழனிசாமி கையில்தான் உள்ளது. இதில் விஜய்க்கு சந்தேகம் வேண்டாம். அவர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இது அவருக்கு தான் பின்னடைவை தரும்.தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் அது அ.தி.மு.க.,வால்தான் முடியும் என்று தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுக்கு தெரிகிறது. விஜய்க்கு தெரியவில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள் வேதனையாக உள்ளார்கள் என்று கூறுகிறார். உங்களிடத்தில் எந்த தொண்டராவது கூறினாரரா. அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை யாரும் சிதைக்க முடியாது. தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.,விற்கும்தான் போட்டி.இவ்வாறு கூறினார்.

எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது தவறு செல்லுார் ராஜூ கூறியதாவது: தமிழ்நாட்டில் ஒரு எம்.ஜி.ஆர்.,தான். எத்தனை பேர் தான் தன்னை எம்.ஜி.ஆர்., என்று சொல்வார்கள். எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., சிறப்பாக இயங்கி வருகிறது. அரசியலுக்கு புதிதாக வருகிறவர்கள் எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர்., என சொல்லிக் கொள்வது வழக்கம் தான். அவரை எல்லோரும் கொண்டாடலாம். தவறில்லை. திடீர் சாம்பார், திடீர் பாஸ்ட் புட் மாதிரி நேராக நான் கோட்டைக்கு தான் செல்வேன் என விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் விஜய் தன்னை ஒப்பிடுவது தவறு. எம்.ஜி.ஆர்., போல் உழைத்து படிப்படியாக மேலே வரவில்லை. உடனடியாக மேலே வர நினைக்கிறார்.

இவ்வாறு கூறினார்.

Advertisement