'சில்லித்தனமான வேலையில் ஒருபோதும் தி.மு.க., ஈடுபடாது; த.வெ.க.,வுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலடி

கொட்டாம்பட்டி : 'தி.மு.க., ஒருபோதும் சில்லித்தனமான வேலையில் ஈடுபடாது' என்று த.வெ.,க., மாநாட்டில் குற்றம் சுமத்திய ஆதவ் அர்ஜூனாவுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்தார்.

மதுரை பாரபத்தியில் த.வெ.க.,வின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடந்தது. இதில் பேசிய தேர்தல் குழு பொறுப்பாளர் ஆதவ் அர்ஜூனா, 'மதுரையில் த.வெ.க., மாநாடு நடத்துவதற்கு அமைச்சர் மூர்த்தி எத்தனை தடைகளை உருவாக்கினார். அத்தனையையும் உடைத்தது த.வெ.க., கூட்டம். அமைச்சர் மூர்த்தி என்ன சமூகநீதி காவலரா. ஒட்டுமொத்த ஊழலையும் ஒரு குடும்பத்துக்கு கொடுக்கும் அமைச்சர்களைத்தான் இன்று உருவாக்கியுள்ளனர்' என்று பேசினார்.

இந்நிலையில் நேற்று காலை மேலுார், கொட்டாம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் மூர்த்தி சென்றார். கொட்டாம்பட்டி புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார். அவரிடம் செய்தியாளர்கள், த.வெ.க., மாநாட்டில் ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், ''எதிரிக்குக் கூட தி.மு.க.,வோ, முதலமைச்சரோ, நாங்களோ அந்த மாதிரி சில்லித்தனமான வேலைகளை எந்த காலத்திலும் செய்யமாட்டோம். இப்படி உண்மைக்கு மாறான செய்தியை ஏன் சொல்கின்றனர், யார் சொல்லி சொல்கின்றனர் என்று தெரியவில்லை'' என்றார்

Advertisement