மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்

28

சென்னை: ''மத்திய அரசுக்கு ரத்தக்கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது,'' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



சென்னையில் மத்திய, மாநில அரசுகள் உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:


தமிழகத்தில் சுமார் 100 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி பல முற்போக்கான சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம். இதற்கு அடித்தளம் அமைத்தது திராவிட இயக்கம்.


தமிழகத்தின் அரசியல் என்பது சமூக நீதி அரசியலாக தான் உள்ளது. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்று அடைந்துள்ளது. ஐநா மன்றத்தில் மானுட மேம்பாட்டு குறியீடுகளான, தனிநபர் வருமனம், கல்வி, பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை போன்ற குறியீடுகளில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகம் பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.


மத்திய அரசு விதிக்கும் நேர்முக வரிகளிலும், ஜிஎஸ்டி வரிகளிலும் மத்திய அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஆனால் தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதி பகிர்வை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.


சிறந்த பல சமூக பொருளாதார திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி நான்கரை ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்துக்கு கொடுத்து வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளை மீறி, போராடி தமிழகத்தை உயர்த்தி வருகிறோம்.


தமிழகம், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜ அல்லாத கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்த பட்டியலில் காஷ்மீரும் ஒரு மாநிலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அரசமைப்பு சட்ட விதிகளை மத்திய அரசு தன்னிச்சையாக மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு,கவர்னர் ஆட்சிகாலத்தில் மத்திய அரசின் நேரடியாக அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியாக அறிவித்தனர்.


கூட்டாட்சிகளுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை திமுகவும், எங்களுடன் இணைந்திருக்கிற கட்சிகளும் சேர்ந்து கண்டித்தோம். இது போன்ற நிலை தொடரக்கூடாது. மாநிலங்களின் உணர்வுகள் தொடர்ந்து பறிக்கப்படக்கூடாது என்ற உணர்வில்தான், மீண்டும் 50 ஆண்டுகளில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான நிகழ்ச்சிகளை ஆய்ந்து, உரிய அரசமைப்புச் சட்டத்தை அந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதியரசர், குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலை குழுவை நியமித்து இருக்கிறோம்.


அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டு உள்ளது. உண்மையில் அதிகார குவியல் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில் அதிகப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் இருக்கிறது.


சர்க்காரியா ஆணையம் வெளியிட்ட இந்த கருத்துகளுக்கு ஏற்ப, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் வகையில், இந்த ஆணையம் அரசமைப்புச் சட்டங்களை மேற்கொள்வதற்கு உரிய பரிந்துரைகள் செய்யவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.


இதுபோன்ற எண்ணற்ற சட்ட குறுக்கீடுகள், நிர்வாக குறுக்கீடுகள் வழியாகவும், பாஜ அல்லாத ஆட்சி எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் வகையிலும் பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய, நியாயமான நிதி பங்கீட்டை அளிக்க மறுக்கிறது.


இதை எல்லாம் கடந்து 4 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு பல சிறந்த திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறது. நிதி பற்றாக்குறை காலத்திலேயே கூட சிறந்த முறையில் நிதி மேலாண்மை செய்து 2024-25ம் ஆண்டில் 11.19 விழுக்காடு என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்கு பின்னர் நாம் அடைந்திருக்கிறோம்.


பலவீனமான மாநிலங்களினால் இந்தியாவை உயர்த்த முடியாது. எனவே இந்திய ஒருமைப்பாட்டில் உண்மையான அக்கறை கொண்ட எல்லாரும் மாநிர சுயாட்சிக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு அமைத்திருக்கும் குழு போல, மற்ற மாநிலங்களும் அமைத்து, மாநில உரிமை முழக்கத்தை முன் எடுக்க வேண்டும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement