சட்டவிரோத சூதாட்டம்; கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ. 12 கோடி பறிமுதல்

12


பெங்களூரு: சட்டவிரோத சூதாட்டத்தில் வருவாய் ஈட்டியதாக கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சித்ரதுர்கா காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர பப்பி, கோவா உட்பட பல்வேறு இடங்களில் காசினோ, கிளப்கள் நடத்தி வருகிறார். இவர் 'கிங் 567, பப்பீஸ் 003, ரத்னா கேமிங்' என்ற பெயர்களில், விதிமீறலாக 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தி, சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவரது சகோதரர் திப்பேசாமி, துபாயில் 'டைமண்ட் சாப்டெக், டி.ஆர்.எஸ்., டெக்னாலஜிஸ், பிரைம் 9 டெக்னாலஜிஸ்' ஆகிய மூன்று நிறுவனங்களை நடத்துகிறார். இந்நிறுவனங்களில் வீரேந்தி பப்பி, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அமலாக்கத்துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, வீரேந்திர பப்பி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, வெளிநாட்டு கரன்சி ரூ.1 கோடி உள்பட ரூ.12 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.6 கோடி தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றும் 4 சொகுசு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, வீரேந்திர பப்பி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு, சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கோங்டாக்கில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சூதாட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement