அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவது ஆக.,25 முதல் நிறுத்தம்: இந்தியா போஸ்ட்

புதுடில்லி: புதிய வரி விதிப்பு காரணமாக வரும் ஆக.,25 முதல் அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாத இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
அதேபோல, கடந்த ஜூலை 30ம் தேதி அமெரிக்கா வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 'ரூ.70 ஆயிரம் (800 டாலர்) மதிப்பு வரையிலான சரக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு திரும்பப் பெறப்படுகிறது.
ஆகஸ்ட் 29ம் தேதி முதல், அனைத்து தபால் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். சுமார் ரூ.9,000 மதிப்புள்ள (100 டாலர்) பரிசுப் பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும்,' என தெரிவித்திருந்தது.
மேலும், ஆக., 25க்குப் பிறகு அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் தபால் பார்சல்களை அமெரிக்க விமானங்களில் ஏற்றிச் செல்ல அனுமதியில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வரும் ஆக.,25 முதல் அமெரிக்காவுக்கு பார்சல்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியா போஸ்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
ஆக., 25 முதல் கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் சுமார் ரூ.9,000 (100 டாலர்) மதிப்புள்ள பரிசுப் பொருட்களைத் தவிர்த்து, அமெரிக்காவுக்கான அனைத்து வகையான பார்சல்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே பார்சல்களை அனுப்ப பதிவு செய்தவர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெறலாம்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்திற்கு தபால் துறை மிகவும் வருந்துகிறது. மேலும் அமெரிக்காவுக்கான முழு சேவைகளையும் விரைவில் மீண்டும் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்துள்ளது.
இதேபோல, ஆஸ்திரியா, பிரான்ஸ் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவுக்கான தபால் பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.





மேலும்
-
திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்
-
இந்திய பெண்கள் அணி முன்னிலை * ராகவி, ஷைபாலி அரைசதம்
-
விநாயகர் சதுர்த்தி விழா: 380 சிறப்பு ரயில் இயக்க ரயில்வே துறை முடிவு
-
டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை; இபிஎஸ் சந்தேகம்
-
தேர்வு முடிவுகளை விட உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
-
உலக ஐயப்பன் சங்கமத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: கேரள பாஜ கடும் எதிர்ப்பு!