உலக ஐயப்பன் சங்கமத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: கேரள பாஜ கடும் எதிர்ப்பு!

48


திருச்சூர்: உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்த கேரள அரசுக்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் இணைந்து நடத்ததும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்தார்.

கேரள அரசின் இந்த செயலுக்கு பாஜ கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் முன்வைத்துள்ளது. பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அறிக்கை:
சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக போன்ற இண்டி கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்கு செல்வது, ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது போன்றது. ஒசாமா பின் லேடன் சமாதானத்தின் தூதராக மாறுவது போன்றது.
இது தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாளாக்கும் செயல் என்று கேரள மற்றும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்; இண்டி கூட்டணியினர் ஹிந்து மத நம்பிக்கையாளர்களுக்கு சொன்னதையும், செய்ததையும் மறக்க மாட்டார்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement