டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை; இபிஎஸ் சந்தேகம்

திருச்சி: 'டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை. ஏதோ கோளாறு உள்ளது. என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும்,' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவெறும்பூர், தஞ்சை பிரதான சாலை பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது; திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்துவிட்டது. 2021 தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் அறிவித்தனர். 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் திமுகவினர் 98% நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் சொல்லிவருகிறார்கள். இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி, அரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, கடலெண்ணை, நல்லெண்ணை என அனைத்து விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. கட்டுப்படுத்த அரசுக்குத் திறமையில்லை.
பயத்தில் தான்...
சமீபத்தில் அமைச்சர் நேரு பேசியபோது, எம்ஜிஆருக்குத்தான் பெண்களிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது, இப்போது ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று சொன்னார். எம்ஜிஆருக்கு இணை வைத்து எவரும் பேச முடியாது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் இருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இரண்டே மாதத்தில் நிறைவேற்றினார்கள். தமிழகத்தில் அப்படியல்ல, ஓட்டுகளைப் பெறுவதற்கு அழகாகப் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்தர்பல்டி அடிப்பார்கள். திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. திமுக தோல்வியடைவது உறுதி, அந்த பயத்தில் தான் மகளிர் உரிமைத் தொகைக்கான விதியைத் தளர்த்தி கொடுக்கிறார்.
வெளிப்படைத்தன்மையில்லை
சட்டம் ஒழுங்கு டிஜிபி 30ம் தேதி ஓய்வுபெறுகிறார். 3 மாதத்துக்கு முன்பாகவே பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் மூவரை பரிந்துரைப்பார்கள். அவர்களில் ஒருவரை தேர்வு செய்வார்கள். இதில் என்ன தாமதம், உள்நோக்கம் என்னவென்று தெரியலை. வெளிப்படைத்தன்மையில்லை. ஏதோ கோளாறு உள்ளது. என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும்.
இந்த பகுதியைச் சேர்ந்த பள்ளிக் கல்வி அமைச்சர் அண்மையில் சட்டசபையில் பேசுகிறார், எந்த விதிமுறையும் இல்லாமல் மேல்நிலைப்பள்ளி அதிகமாக அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டதாகச் சொல்கிறார், பள்ளி திறப்பது தப்பா? கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்களுக்காக அரசாங்கம்,. திமுக ஆட்சியில் அரசாங்கத்துக்காக மக்கள். இதுதான் திமுக, அதிமுகவுக்கான வேறுபாடு.
கடனில் முதலிடம்
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வர் ஸ்டாலின். திமுக ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இப்படி கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு. கடன் அதிகம் வாங்கும்போது வரி அதிகமாகும். வரி போட்டுத்தான் கடனை அடைக்க முடியும். இது, ஜல்லிக்கட்டுக்குப் பேர் பெற்ற பகுதி. இங்கு ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும், வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும்.
சென்னையில் நேற்று பெய்த மழையால் மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில் கண்ணகி நகரில் வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இந்த அரசில் மின்சார வாரியம் சரியாகச் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரூ.75,000 மானியம்
ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படும் என இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.





மேலும்
-
போலீஸ் ஸ்டேஷனில் இருந்தே சாட்சியம் கவர்னர் உத்தரவுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
-
கேன்டீன் டீ குடித்த டாக்டர் 'சீரியஸ்'
-
உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு பெண் பலி; கடைகள், வாகனங்கள் சேதம்
-
தெருநாய்க்கு உணவளிக்கும் இடம் டில்லி மாநகராட்சி மும்முரம்
-
காஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து 2 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
-
இன்று இனிதாக ... (24.08.2025) புதுடில்லி