உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு பெண் பலி; கடைகள், வாகனங்கள் சேதம்

சமோலி: உத்தராகண்டில் நேற்று முன்தினம் மீண்டும் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் பலியானார். கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மாயமானவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த 5ம் தேதி மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஐந்து பேர் பலியாகினர். ஏராளமான வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
ராணுவ வீரர்கள் உட்பட மாயமான 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், உத்தராகண்டில் நேற்று முன்தினம் மீண்டும் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சமோலி மாவட்டத்தில், பிந்தார் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள தாராலி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மேகவெடிப்பு ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் ஆர்ப்பரித்து வந்த வெள்ளத்தில் அப்பகுதியில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள், கடைகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
சேரும், சகதியுமாக சென்ற வெள்ளத்தால், தாராலி சந்தை, கோட்தீப் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின.
இரு சக்கர வாகனங்கள், கார்கள் மண்ணில் புதைந்தன. தாராலி அருகே உள்ள சாக்வாடா கிராமத்தில் இடிபாடுகளில் சிக்கி இளம்பெண் பலியானதாக கூறப்படுகிறது.
வெள்ளப்பெருக்கில் வீடுகளில் துாங்கிக் கொண் டிருந்தவர்கள் அடித்து செல்லப்பட்டதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்களை தேடும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேகவெடிப்பு குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தன் சமூக வலைதளத்தில், 'சமோலியின் தாராலியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது' என, தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, டேராடூன், சமோலி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
@block_B@
ஜார்க்கண்டில் இரு தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய நகரங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் ராஞ்சியில், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. அங்கு, பிஸ்க்வா ரயில்வே ஸ்டேஷன் அருகே கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தின் கான்க்ரீட் பலகைகள் இடிந்து விழுந்ததால், தேசிய நெடுஞ்சாலை 43ல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செராய்கேலா - கர்சாவான், சத்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்தன. இரு நாட்களாக பெய்த கனமழைக்கு ஜார்க்கண்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர்; 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணி தொடர்கிறது.block_B