தெருநாய்க்கு உணவளிக்கும் இடம் டில்லி மாநகராட்சி மும்முரம்

புதுடில்லி,:உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை கண்டறியும் பணிகளை டில்லி மாநகராட்சி துவக்கியுள்ளது.

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் திரியும் தெருநாய்களை, எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்து பராமரிக்க, உயர் நீதிமன்றம், 11ம் தேதி உத்தர விட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீது, 14ம் தேதி விசாரணை நடந்தது.

உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் அளித்த தீர்ப்பில், தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்யவும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி அவற்றைப் பிடித்த இடத்திலேயே விடுவிக்கவும் உத்தரவிட்டது. மேலும், தேசிய தலைநகர் பிராந்தியத்தில், தெரு நாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்களை ஏற்படுத்தவும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதேநேரத்தில், தாங்கள் விரும்பும் இடங்களில் எல்லாம் தெருநாய்களுக்கு உணவு வழங்குவோருக்கு தண்டனை விதிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, டில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சத்ய சர்மா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநகராட்சியின் அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் பிரத்யேக இடத்தை கண்டறியவது, ஆக்ரோஷமான நாய்களை பராமரிக்க துவாரகா 29வது செக்டாரில் காப்பகம் அமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

டில்லி மாநகர் முழுதும் தெருநாய்களுக்கு உணவு வழங்கும் இடத்தை கண்டறியும் பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. மாநகரில் ஏற்கனவே இரண்டு இடங்களில், நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையங்கள் உள்ளன.

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை பராமரிக்க காப்பகங்கள் விரைவில் அமைக்கப்படும். தெருநாய்களின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்காக விலங்கு நலக் குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement