கேன்டீன் டீ குடித்த டாக்டர் 'சீரியஸ்'

ராஞ்சி: ஜார்க்கண்டில் உள்ள, 'ரிம்ஸ்' அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவி அங்குள்ள கேன்டீனில் டீ குடித்து மயங்கி விழுந்தார்.

ஜார்க்கண்டின் ராஞ்சியில், அரசுக்கு சொந்தமான, 'ரிம்ஸ்' எனப்படும், ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளது. இங்கு மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவில் முதுநிலை முத லாம் ஆண்டு படிக்கும் மாணவி, கடந்த 21ல் அந்த மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்தார். அவருடன் பணியில் இருந்த மற்ற டாக்டர்களும் மருத்துவமனை கேன்டீனில் டீ வாங்கினர்.

இந்நிலையில், அந்த டீயை பெண் டாக்டர் மட்டும் குடித்தார். சுவை மோசமாக இருந்ததால் மற்றவர்கள் குடிக்கவில்லை. சில நிமிடங்களில் பெண் டாக்டர் மயங்கி விழுந்தார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் குடித்த டீயில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

டீ வைக்கப்பட்டிருந்த பிளாஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வுக்கு அனுப்பினர். டீயில் விஷம் கலந்துள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர். டீ போட்டு கொடுத்த கேன்டீன் ஊழியரை விசாரிக்கின்றனர்.

Advertisement