ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி; சாதித்து காட்டியது இஸ்ரோ!

2

புதுடில்லி: ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கான மைல்கல்லாக கருதப்படுகிறது.


இந்திய வானியல் ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பாக, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டம் கருதப்படுகிறது. இதற்காக, விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.


அவர்களில் ஒருவரான, நம் விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, சமீபத்தில், அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலை யத்துக்கு சென்று திரும்பினார். ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று ( ஆகஸ்ட் 24)ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
விண்வெளியில் இருந்து மனிதர்களை சுமந்து வரும் விண்வெளி ஓடத்தை கடலில் இருந்து மீட்டெடுக்கும் சோதனை வெற்றி அடைந்தது.

இஸ்ரோ, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, கடற்படை என பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி, ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தொடக்கம் தான் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

Advertisement