வரதட்சணை விவகாரத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை: தப்பி ஓடிய கணவன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

8

நொய்டா: வரதட்சணை விவகாரத்தில் மனைவி தீக்குளித்து உயிரிழந்த நிலையில், தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த விபின் மற்றும் சகோதரர் ரோஹித். இவர்களுக்கு நிக்கி 28, அவரது சகோதரி காஞ்சன் ஆகியோருடன் 2016 டிசம்பர் 10ம் தேதி திருமணம் நடந்தது. இதில் விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் நிக்கியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி விபினின் சகோதரர் ரோஹித்தை மணந்த அவரது சகோதரி காஞ்சன், விபினும் அவரது தாயார் தயாவும் தன் சகோதரி நிக்கியை தீக்குளிக்கச் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நிக்கியை கொடுமைப்படுத்திய வீடியோக்களை காஞ்சன் பகிர்ந்துள்ளார்.இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், தாயும் மகனும் நிக்கியைத் தாக்குவதைக் காட்டுகின்றன. மற்றொரு கிளிப் படிக்கட்டில் தடுமாறி எரியும் நிக்கியைக் காட்டுகிறது.
தீக்குளித்த நிக்கி டில்லியின் சப்தர்ஜங் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.


அதனை தொடர்ந்து, போலீசார் எடுத்த நடவடிக்கையில் விபின் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் காவலில் இருந்து விபின் தப்பிக்க முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுபிடித்தனர்.


விபின் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தாய் தயா, தந்தை சத்யவீர் மற்றும் சகோதரர் ரோஹித் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து நிக்கியின் தந்தை கூறியதாவது:

வரதட்சணை கோரிக்கைகளை பலமுறை நிறைவேற்றிய போதிலும், நிக்கியின் மாமியார், நிக்கியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
முதலில் அவர்கள் வரதட்சணையாக ஒரு ஸ்கார்பியோவைக் கேட்டனர், அது வழங்கப்பட்டது. பின்னர், அவர்கள் ஒரு புல்லட் பைக்கைக் கேட்டார்கள், அதுவும் வழங்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் என் மகளை சித்திரவதை செய்து கொண்டே இருந்தனர்.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். விபினை என்கவுன்டர் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement