முதல்வரிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி!

20

சென்னை: இண்டி கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.


துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேவையான உறுப்பினர் எண்ணிக்கை இருப்பதால், அவர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

எனினும், எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று சென்னையில் திமுக கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

துணை ஜனாதிபதி பதவிக்கு சுதர்சன் ரெட்டி தகுதியானவர். இந்திய ஜனநாயகத்தை காக்கவும், மக்களாட்சியை காக்கவும் அரசியல் சாசனத்தை காக்கவும் சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறாா். தமிழக மக்களின் உணர்வை மதிக்கக்கூடியவர்.
சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். அதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


அதைதொடர்ந்து சுதர்சன் ரெட்டி பேசியதாவது:கல்வி, சுகாதாரத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. தனித்துவமான கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை ஆகியவற்றால் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

சமூக , பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து வரும் போதெல்லாம் முதல்வர் போராடி வருகிறார்.
கூட்டாட்சி தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதல்வர். தொலை நோக்கு பார்வையிலும் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது தமிழகம்.
இன்றைய நிலையில் கூட்டாட்சிக்கு மட்டுமல்ல அரசியலைப்புக்கே ஆபத்து வந்துள்ளது. துணை ஜனாதிபதியாக எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
இவ்வாறு சுதர்சன் ரெட்டி பேசினார்.


திமுக எம்பிக்கள், கூட்டணி கட்சியினர் பலர் நிகழ்ச்சியில் பேசினர்.

Advertisement