தண்டவாளத்தை கடக்கும் பயணியர் பொத்தேரியில் விபத்து அபாயம்

மறைமலை நகர்:பொத்தேரி ரயில் நிலையம் அருகில் ஆபத்தான முறையில் பயணியர் தண்டவாளத்தை கடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை தடத்தில் தினமும் 60 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 60 விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் தடத்தில் பொத்தேரி ரயில் நிலையம் அருகில் பயணியர் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்க ரயில்வே துறை சார்பில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

இதில் ஒரு இடத்தில் சுவர் அமைக்காமல் உள்ளதால் பயணியர் குறுக்கு வழியை பயன்படுத்தி ரயில் நிலையம் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் தண்டவாளத்தை கடப்பதால் பயணியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 12ம் தேதி இந்த பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் சரக்கு ரயில் மோதி உயிரிழந்தார். இதே பகுதியில் கடந்தாண்டு நடந்த இரு விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்.

இது குறித்து பயணியர் கூறியதாவது:

பொத்தேரி ரயில் நிலையத்தை பயன்படுத்தி சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணியர் கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பொத்தேரி ரயில் நிலையத்தில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகளில் வரும் பயணியர் கிளாம்பாக்கம் செல்லாமல் ஜி.எஸ்.டி., சாலை அருகில் உள்ள இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் தண்டவாளங்களை கடப்பதை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் பணிகள் முழுமையடையாமல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பயணியர் விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்களும் இருள் சூழ்ந்த பகுதியில் நடைபெற்று வருகின்றன.

எனவே இந்த வழிகளை நிரந்தரமாக மூட ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement