நெடுஞ்சாலையில் நெற்களம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஆர்.கே.பேட்டை:ராஜாநகரம் ஏரிக்கரை அருகே, ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையை, விவசாயிகள் சிலர் நெல்லை கொட்டி நெற்களமாக பயன்படுத்தி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், ராஜாநகரம் ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை வளைவுகளில் வாகனங்கள் சாலையை விட்டு விலகி, ஏரியில் கவிழ்ந்து விபத்துகளில் சிக்கி வந்தன.

விபத்துகளை தவிர்க்கும் விதமாக நெடுஞ்சாலை துறையினர், இப்பகுதியில் உள்ள சாலை திருப்பங்களை அகலப்படுத்தினர். இதனால், வாகனங்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்க முடிகிறது.

இந்த நெடுஞ்சாலையை சில விவசாயிகள், நெற்களமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், சமீபத்தில் நெடுஞ்சாலை துறையினர் மைய தடுப்பு அமைத்தனர். 'நெற்களமாக பயன்படுத்தினால், காவல் துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, எச்சரிக்கை பதாகையும் வைத்துள்ளனர்.

ஆனால், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், இச்சாலையை சில விவசாயிகள் நெற்களமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

Advertisement