இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்: தூதர் உறுதி

புதுடில்லி: ''அமெரிக்காவின் வரிகள் இருந்த போதிலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்'' என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்தார்.



ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் மீது கூடுதல் வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவை ரஷ்யாவிற்கான இந்திய தூதர் வினய் குமார் விமர்சித்தார்.இது குறித்து வினய் குமார் கூறியதாவது: இந்திய நிறுவனங்கள் எங்கிருந்து சிறந்த ஒப்பந்தம் கிடைக்கிறதோ அங்கிருந்து எண்ணெய் வாங்கும்.



அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது. வரி உயர்வு நியாயமான வர்த்தக கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். இந்தியாவின் 140 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எரிசக்தி துறையில் வளர்ச்சியை கொண்டு வருவதே எங்கள் நோக்கம். ரஷ்யா மற்றும் பல நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு உலக எண்ணெய் சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவி உள்ளது.


நாட்டின் தேசிய நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து எடுக்கும். மேலும் வர்த்தகம் வணிக அடிப்படையில் நடைபெறுகிறது. எனவே வணிக பரிவர்த்தனை வர்த்தக இறக்குமதிகளின் அடிப்படை சரியாக இருந்தால் தொடர்ந்து நடைபெறும். தற்போதைய நிலைமை இதுதான். இவ்வாறு வினய் குமார் கூறினார்.

Advertisement