பெண் போலீசை தாக்கியவர் கைது ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகை

திருத்தணி:போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை, 84 நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் லீலாவதி, 36. இவர், கடந்த ஜூன் 1ம் தேதி திருத்தணி முருகன் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அனுமதிக்க முடியாது அப்போது, திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தீன்பாய், 45, என்பவர், ஆட்டோவில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையின் நுழைவாயிலுக்கு சென்றார்.

அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் லீலாவதி, 'மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால், ஆட்டோவை மலைக்கோவிலுக்கு அனுமதிக்க முடியாது' எனக் கூறினார்.

இதனால், பெண் போலீசுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், பெண் காவலரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், பெண் போலீசை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் சமரசப்படுத்தி அனுப்பினர்.

காலதாமதம் இதுகுறித்து, பெண் போலீஸ் லீலாவதி, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்யாமல் காலதாமதம் செய்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தீன்பாய் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'மனுவை தள்ளுபடி செய்தும், பெண் போலீசை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, திருத்தணி போலீசார் தீன்பாயை கைது செய்தனர்.

தகவல் அறிந்ததும், 60க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், தீன்பாய் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போலீஸ் இன்ஸ்பெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், திருத்தணி- அரக்கோணம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். ஏ.எஸ்.பி., ஷூபம் திவான் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மறியலை தடுத்ததால், ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர். பின், தீன்பாய் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

Advertisement