15 ஆண்டாக சீரமைக்காத சாலை கடம்பத்துார் மக்கள் போராட்டம்

கடம்பத்துார்:கடம்பத்துார் பகுதியில் உள்ள மேட்டுத்தெருவில், 15 ஆண்டுகளாக சாலை சீரமைக்காததை கண்டித்து, பகுதிமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் மேட்டுத் தெருவில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க, 15 ஆண்டுகளாக பலமுறை ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன், மேட்டுத் தெருவில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு தி.மு.க., அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வருவதை முன்னிட்டு, ஒரு பகுதியில் மட்டும் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.

ஆனால், மற்ற பகுதிகளில் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பகுதிமக்கள், நேற்று காலை திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில், அரசு பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கடம்பத்துார் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சு நடத்தினர். 'மேட்டுத்தெரு பகுதியில் சாலை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் சாலை சீரமைக்கப்படும் என, ஊராட்சி செயலர் கூறினார்.

இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.

Advertisement