குறைகளை தெரிவிக்க க்யூ.ஆர்., குறியீடு அறிமுகம் செய்தார் திருவள்ளூர் எம்.பி.,

கும்மிடிப்பூண்டி:க்யூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தொகுதி மக்கள் தெரிவிக்கும் முறையை, திருவள்ளூர் எம்.பி., அறிமுகம் செய்துள்ளார்.

திருவள்ளூர் எம்.பி.,யாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் பதவி வகித்து வருகிறார். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, மாதவரம், ஆவடி ஆகிய சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது, திருவள்ளூர் எம்.பி., தொகுதி.

அனைத்து பகுதிகளுக்கும் எம்.பி., நேரடியாக சென்று குறைகளை கேட்டறிவது என்பது இயலாத ஒன்று. இதனால், 'வெற்றி பெற்ற பின், எம்.பி.,யை பார்க்க முடியவில்லை' என்ற குற்றச்சாட்டு அனைத்து தொகுதியிலும் பொதுவாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில், குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிய, க்யூ.ஆர்., குறியீட்டு முறையை அறிமுகம் செய்தார்.

இந்த க்யூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்ததும், அது நேரடியாக 'நம்ம ஊரில்; நம்ம எம்.பி.,' என்ற பக்கத்திற்கு செல்கிறது.

அங்கு, குறையை தெரிவிப்பவரின் பெயர், மொபைல்போன் எண், முகவரி, ஆதார் மற்றும் குடும்ப அட்டை பதிவேற்றம் செய்த பின், குறை அல்லது கோரிக்கையை தெரிவிக்க வேண்டும்.

இந்த 'க்யூ ஆர்' குறியீடு, மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக, திருவள்ளூர் எம்.பி., தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், போஸ்டர் ஒட்டியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் வருகின்றனர்.

Advertisement