ஒன்றரை ஆண்டிலேயே பல்லாங்குழியான பாரிவாக்கம் - மேட்டுப்பாளையம் சாலை

ஆவடி:பாரிவாக்கம் - மேட்டுப்பாளையம் சாலை, அமைக்கப்பட்ட ஒன்றரை ஆண்டிலேயே சேதமடைந்து, குண்டும் குழியுமாக பல்லாங்குழியாக மாறியுள்ளது, சாலையின் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

ஆவடியில் இருந்து பாரிவாக்கம் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலை, 1.74 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை ஒட்டி 30க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த சாலை வழியாக, ஆவடியில் இருந்து ஆயில்சேரி, கண்ணப்பாளையம், பாரிவாக்கம் வழியாக பூந்தமல்லிக்கு இரண்டு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பாரிவாக்கம் - மேட்டுப்பாளையம் சாலை, பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது.

மேலும், ஐந்து ஆண்டுகள் சாலை பராமரிப்பு பணிக்காக 6.26 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாலை அமைத்து ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் சாலை படுமோசமாக சேதமடைந்துள்ளது. பல்லாங்குழி போன்று மாறியுள்ள சாலையை, பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் முதுகுவலியால் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், வாகனங்களும் சேதமடைகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலை மேலும் வலு விழந்து குட்டைகள் போன்று காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக, இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் உயிர்பலி அபாயத்தில் பயணித்து வருகின்றனர். தெரு விளக்குகள் எரியாததால், வழிப்பறி அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைப்பதுடன், தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.



வாரியத்தின் அரைகுறை பணி கோபாலபுரம் சாலை படுமோசம்





ஆவடி மாநகராட்சி, 37வது வார்டில் கோபாலபுரம் எட்டாவது பிரதான சாலை அமைந்துள்ளது. இதன் இரண்டாவது குறுக்குத் தெருவில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

கடந்த ஜூலை மாதம், சாலையில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடந்தன. இதற்காக பெயர்த்தெடுக்கப்பட்ட சாலை, சரிவர மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கினர். சில வாகனங்கள், பள்ளத்தில் சிக்குவதும் வாடிக்கையாக இருந்தது.

கடந்த ஜூலை 28ம் தேதி காலை, அவ்வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று, அந்த பள்ளத்தில் சிக்கியது. இதனால், மாணவ - மாணவியர் அவதி அடைந்தனர்.

இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, குறிப்பிட்ட பள்ளத்தில் மட்டும், சிமென்ட் கலவை கொட்டி சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு பெய்த கன மழைக்கு, அந்த சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக மாறியுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன், சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


பழைய சி.டி.எச்., சாலையை சீரமைக்க வலுக்கும் கோரிக்கை



ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில், 10வது வார்டு, பழைய எம்.டி.எச்., சாலையில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலை, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக இருந்தது.

இச்சாலையில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வாரிய பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, சாலையின் இருபுறமும், பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நான்கு மாதங்களாகியும் இதுவரை பாதாள சாக்கடை, குடிநீர் பணிகள் முடியவில்லை. இதனால், சாலை மேலும் வலுவிழந்து, மழைநீருடன் கழிவுநீர் கலந்து குட்டை போல் மாறி உள்ளது.

எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடித்து, புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement