ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை டெலிவரி எடுத்த இந்திய தொழிலதிபர்!

10

புதுடில்லி: உலகில் அதிக விலை கொண்ட 3 ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை இந்திய தொழிலதிபர் சஞ்சய் கோடாவாட் டெலிவரி எடுத்துள்ளது, பேசு பொருளாகி இருக்கிறது.



உலகளவில் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பெரும் நடிகர்கள், தொழிலதிபர்கள், மன்னர்கள் வாங்குவது வழக்கம். வாகன சந்தையில் இந்த கார்களுக்கு என்று எப்போதும் தனி இடமே உண்டு.


இப்படிப்பட்ட சொகுசான ஆடம்பரம்மிக்க ரோல்ஸ் ராய்ஸின் 3 கார்களை ஒரே நாளில் தொழிலதிபர் சஞ்சய் கோடாவாட் டெலிவரி எடுத்துள்ளார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், சஞ்சய் கோடவாட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இவரின் தொழில் சாம்ராஜ்யம் பெரியது.


தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், சுரங்கம் என பல்வேறு தொழில்களில் இவரின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இவர் தற்போது 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை ஒரே நாளில் வாங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் 2, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இவி என்ற 3 கார்களை தான் சஞ்சய் கோடாவாட் வாங்கி இருக்கிறார். இந்த கார்களின் விலையே முறையே ரூ. 10.50 கோடி, ரூ.8.95 கோடி மற்றும் ரூ. 7.50 கோடியாகும்.


பாதுகாப்பு மற்றும் சவுகரியமான பயணங்களுக்காக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தொழிலதிபர்கள் வாங்குகின்றனர் என்றாலும் கூட, ஒரே நாளில் பல கோடி ரூபாய் விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸின் 3 கார்களை டெலிவரி எடுத்துள்ளதன் மூலம் சஞ்சய் கோடாவாட் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.


கார்களுடன் சஞ்சய் கோடாவாட் எடுத்துள்ள போட்டோக்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளன.

Advertisement