டில்லிக்கு மஞ்சள் அலர்ட்: விமான நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புதுடில்லி: மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.



தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக, டில்லியிலும், புறநகர் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.


நொய்டா, காசியாபாத் என பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரீத் விகார், ராஜிவ் சவுக், ஜாபர்புர், இந்தியா கேட், அக்ஷர்தாம், சப்தர்ஜங், லோதி சாலை என பல பகுதிகளில் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.


இடைவிடாத மழை சாலை போக்குவரத்தை மட்டும் அல்லாது ரயில் மற்றும் விமான சேவையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில் டில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நிலையில் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


இதுகுறித்து அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;


டில்லியில் நிலவும் மோசமான காலநிலையால் விமான நிலையம் வரும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களின் சேவைகளிலும் மாற்றம் காணப்படலாம். போக்குவரத்தில் காலதாமதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.


மழையானது விமான சேவையை பாதிக்கும் சூழல் உருவாகலாம். எனவே விமானம் புறப்பாடு மற்றும் வருகை பற்றிய விவரங்களை விமான நிலையம் வரும் முன்னரே சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம். பயணத்திற்கு வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் இருப்பின், அதை செய்து கொள்ளலாம்.


இவ்வாறு விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

Advertisement