மண்டை ஓடுகளை டில்லிக்கு எடுத்து சென்ற சின்னையா; தர்மஸ்தலா வழக்கில் கைதானவர் குறித்து 'திடுக்'!

பெங்களூரு: தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு குறித்து, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
இந்த வழக்கின் புகார்தாரரான மாண்டியாவின் சிக்கப்பள்ளி கிராமத்தின் சின்னையா, 53 என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். நேற்று நடந்த விசாரணையின் போது, சின்னையா பகீர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
நீதிமன்றத்தில் பேச பயிற்சி இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்த சின்னையாவை, ஒரு கும்பல் தொடர்பு கொண்டு உள்ளது.
தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறும்படி கூறி உள்ளனர். சின்னையாவை தர்மஸ்தலாவுக்கு அழைத்து சென்று, போலியாரு வனப்பகுதியில் ஒரு மண்டை ஓடு, சில எலும்பு கூடுகளை புதைத்து உள்ளனர். இன்னொரு மண்டை ஓடு, எலும்பு கூடுகளுடன் தர்மஸ்தலாவில் இருந்து டில்லிக்கு, சின்னையாவை காரில் அழைத்து சென்று உள்ளனர்.
டில்லி சென்ற பின், அங்கு ஒருவரை சின்னையாவும், கும்பலும் சந்தித்து உள்ளனர். டில்லியில் இருந்த நபர், சின்னையாவிடம், நீதிமன்றத்தில் எப்படி பேச வேண்டும்; போலீசார் முன்பு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுத்து உள்ளார். பின், அவரை டில்லியில் இருந்து தர்மஸ்தலாவுக்கு அழைத்து வந்து உள்ளனர்.
முதலில், 30க்கும் மேற்பட்ட இடங்களில், பெண்களின் உடல்களை புதைத்து உள்ளேன் என்று, எஸ்.ஐ.டி., முன்பு, சின்னையா கூறினார். ஆனாலும் 13 இடங்கள் மட்டும் 'மார்க்கிங்' செய்யப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
2 ஆண்டு பயணம்
போலீஸ் முன்பு வாக்குமூலம் அளித்த போது 10 முதல் 12 பேரின் பெயர்களை, சின்னையா கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் நாட்களில் அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பவும், எஸ்.ஐ.டி., தயாராகி வருகிறது. தன்னிடம் இருந்த மொபைல் போனை, அந்த கும்பல் வாங்கி கொண்டதாகவும் சின்னையா கூறி உள்ளார்.
அவரது மொபைல் போன் நம்பரை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் வாங்கி உள்ளனர். அதை வைத்து இரண்டு ஆண்டுகளாக அவர் யார், யாருடன் பேசினார். யாருக்கு குறுந்தகவல் அனுப்பினார் என்பதை கண்டறியும், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இதுதவிர அவரது வங்கிக்கணக்கு தகவல்கள், இரண்டு ஆண்டுகள் மேற்கொண்ட பயணம் குறித்தும் விசாரிக்க உள்ளனர்.
ஸ்டெனோகிராபர்
இதுபோல தர்மஸ்தலா சென்று மகள் அனன்யா பட் காணாமல் போனதாக, பொய் புகார் அளித்த சுஜாதா பட்டையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர, எஸ்.ஐ.டி., அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. கடந்த 1985ம் ஆண்டு முதல் தற்போது வரை சுஜாதா பட் எங்கெங்கு வசித்தார், அவருக்கு யாருடன் தொடர்பு இருந்தது; கோல்கட்டாவில் சி.பி.ஐ., ஸ்டெனோகிராபராக வேலை செய்ததாக அவர் கூறியது உண்மையா என்பது உட்பட பல விபரங்களை சேகரிக்க எஸ்.ஐ.டி., தயாராகி வருகிறது. வரும் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவும் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதற்கிடையில், தர்மஸ்தலா வழக்கு குறித்து, ஏ.ஐ.,புகைப்படத்துடன் வீடியோ வெளியிட்ட யு - டியூபர் சமீர் மீது, பெல்தங்கடி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் வாங்கினார். ஆனாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
எடிட் செய்தது யார்?
இதன்படி, நேற்று மதியம் 1:00 மணிக்கு, பெல்தங்கடி போலீஸ் நிலையத்திற்கு தனது வக்கீல்களுடன் சமீர் வந்தார். 'கூலிங் கிளாஸ்' அணிந்தபடி கையில் ஒரு பையுடன், சிரித்தபடியே போலீஸ் நிலையத்திற்குள் சென்றார். விசாரணை அதிகாரி நாகேஷ் கத்ரி முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
தர்மஸ்தலா வழக்கு குறித்து ஏ.ஐ., புகைப்படத்துடன் யு - டியூப்பில் வீடியோ பதிவிட்டது ஏன்; உங்களை யார் வீடியோ பதிவிட சொன்னார்கள்; வீடியோவை எடிட் செய்தது யார்; தர்மஸ்தலாவில் பெண்கள் கொல்லப்பட்டதாக, உங்களிடம் தகவல் இருந்ததா; அப்படி தகவல் இருந்தால் அதற்குரிய ஆதாரத்தை கொடுங்கள்; இரு சமூகங்கள் இடையில் பிரச்னை ஊக்குவிக்க, வீடியோ பதிவிட்டீர்களா?
குரல் பரிசோதனை
உங்கள் யு - டியூப் சேனலை எத்தனை பேர் பின்தொடர்கின்றனர்; யு - டியூ ப்பில் இருந்து உங்களுக்கு வரும் வருமானம் என்ன; தர்மஸ்தலா பற்றி வீடியோ பதிவிடும்படி உங்களிடம் யாராவது சொன்னார்களா; உங்கள் யு - டியூப் சேனலில் யார் பணி செய்கின்றனர் . தர்மஸ்தலா தொடர்பான வீடியோவை தயார் செய்த பின், முதலில் யாருக்கு லிங்க் அனுப்பி வைத்தீர்கள்;
இந்த வீடியோவுக்கு மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு என்ன; வீடியோவை பார்த்த பின் உங்களை மொபைல் போனில் யாராவது தொடர்பு கொண்டு பேசினார்களா என்பது உட்பட பல கேள்விகளை, சமீரிடம், விசாரணை அதிகாரி நாகேஷ் கத்ரி எழுப்பி உள்ளார். இந்த கேள்விகளுக்கு சமீரும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வரை அவரிடம் விசாரணை நடந்தது.
யு - டியூப் வீடியோவில் பேசிய குரலும், சமீரின் குரலும் ஒரே மாதிரியாக உள்ளதா என்பதை கண்டறிய, குரல் பரிசோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டு உள்ளார். வீடியோவில் பேசியதை அப்படியே மறுபடியும் பேச வைத்து, வீடியோ எடுத்து உள்ளனர். அந்த வீடியோ தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.












மேலும்
-
ஒரு லாரிக்கு உரிமை கோரிய இருவர் திண்டிவனம் போலீசில் பரபரப்பு
-
பாலியல் புகார் எதிரொலி; பாலக்காடு காங் எம்எல்ஏ ராகுல் சஸ்பெண்ட்
-
டில்லிக்கு மஞ்சள் அலர்ட்: விமான நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
-
நீர்வளத்தை குன்ற செய்யும் அரசு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
காதலர்களுக்காக திறந்திருக்கும் எங்கள் கட்சி அலுவலகங்கள்: சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
-
உடல்நலக் காரணங்களுக்காகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா; வேறு காரணமில்லை என்கிறார் அமித்ஷா