பிரதமரின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கு : சான்றிதழ் வெளியிட தேவையில்லை என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

15

புதுடில்லி: பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடத் தேவையில்லை என்று டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட 2016ம் ஆண்டில் தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தகவல் அறியும் மனு, அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்று வாதிட்டு, தகவல் குழுவின் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டியதே என்று பல்கலைக்கழகம் கூறியிருந்தது.

மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டில்லி பல்கலை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 28 அன்று நீதிபதி சச்சின் தத்தா ஒத்திவைத்தார்.

வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதமரின் இளங்கலைச் சான்றிதழை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணைய உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பல்கலை சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தகவல் ஆணைய உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டியதே என்றும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும் வாதிட்டார்.

மாணவர்களின் பட்டங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவை தனிப்பட்ட நபருடையவை. தகவல் பெறும் உரிமையை காட்டிலும், தனி நபருடைய உரிமைகள் மிகவும் முக்கியமானவை என்று பல்கலை சார்பில் வாதிடப்பட்டது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடத் தேவையில்லை என்று டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Advertisement