ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிடணும்: இஸ்ரேல் நிபந்தனை!

1


ஜெருசலேம்: "ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும்" என பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்து உள்ளார்.


இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான போரில் ஹமாஸூக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைய கோரி, லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கென லெபனான் நாட்டின் ஒரு பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.


பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.


லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்று உறுதி செய்யப்பட்டால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும்.


இந்த முடிவு லெபனான் தனது இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாகும். இஸ்ரேலும் லெபனானும் ஒத்துழைப்பு உணர்வில் முன்னேற வேண்டிய நேரம் இது. இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement