கிட்னி விற்பனை; ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது ஐகோர்ட் கிளை

மதுரை: கிட்னி விற்பனை விவகாரத்தை விசாரிக்க தனி விசாரணைக்குழுவை அமைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'கிட்னி விற்பனை முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை, சிபிஐ நடத்த உத்தரவிட வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏன் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை?,' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, புகார் அளித்தால் மட்டுமே குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், 'பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தெரிந்தபிறகு வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது. பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில், நீலகிரி எஸ்பி நிஷா, திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், கோவை எஸ்பி கார்த்திகேயன், மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இக்குழு நடத்தும் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் நேரடியாக கண்காணிக்கப்படும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப். 24 க்குள் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்க வேண்டும்," இவ்வாறு உத்தரவிட்டனர்.






