இந்திய கால்பந்துக்கு தடை வருமா * 'பிபா' எச்சரிக்கை

புதுடில்லி: 'திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், இந்திய கால்பந்துக்கு தடை விதிக்கப்படும்,'' என 'பிபா' எச்சரித்துள்ளது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) நிர்வாக விதிகள் குறித்த வழக்கு கடந்த 2017 முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து கால்பந்தை நிர்வகிக்க, தற்காலிக குழுவை நீதிமன்றம் நியமித்தது. ஆனால், ' இந்திய கால்பந்தில் மூன்றாம் நபர் தலையீடு உள்ளது,' என தெரிவித்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா'), கடந்த 2022, ஆக., மாதம், இந்திய கால்பந்துக்கு தடை விதித்தது.
இதன் பின் தற்காலிக குழு கலைக்கப்பட தேர்தல் நடந்தது. கல்யாண் சவுபே தலைவராக தேர்வானார். இரு வாரத்தில் தடை விலக்கப்பட்டது. எனினும், நிர்வாக விதிகளை முறைப்படி ஏற்றுக் கொள்ளாமல் உள்ளனர். இதையடுத்து, 'பிபா', ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.சி.,) சார்பில், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனுப்பிய கடிதத்தில்,' அக்டோபர் 30 க்குள், திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை ஏற்காத பட்சத்தில் இந்திய கால்பந்துக்கு தற்காலிக தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை. பலமுறை உறுதி அளித்த போதும், இதுகுறித்த வழக்கு 2017 முதல் நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்து, இறுதி செய்யாமல் திணறுகின்றனர். புதிய ஒப்பந்தம் செய்யப்படாமல், உள்ளூர் தொடர் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய கால்பந்தில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது,' என தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிர்வாக விதிகள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் சாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில், தடை அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

Advertisement