ஓய்வு பெற்றார் அஷ்வின் * பிரிமியர் கிரிக்கெட்டில் இருந்து...

சென்னை: பிரிமியர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தமிழகத்தின் அஷ்வின்.
இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 38. கும்ளேவுக்கு (619) அடுத்து அதிக டெஸ்ட் விக்கெட் சாய்த்த இரண்டாவது இந்திய பவுலரான அஷ்வின் (537), கடந்த டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பிரிமியர் அரங்கில் 2009ல் சென்னை அணிக்காக களமிறங்கினார். 2010, 2011ல் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார். 2016ல் புனே, 2018-2019ல் பஞ்சாப், 2020-2021ல் டில்லி, 2022-2024ல் ராஜஸ்தான் என ஐந்து அணிகளில் விளையாடினார்.
2025ல் மீண்டும் சென்னை அணிக்கு (ஏலத் தொகை ரூ. 9.75 கோடி) திரும்பினார். 9 போட்டியில் 7 விக்கெட் மட்டும் சாய்த்தார். தற்போது பிரிமியர் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:
ஒவ்வொரு முடிவிலும், புதிய துவக்கம் இருக்கும் என்பர். பிரிமியர் அரங்கில் ஒரு வீரராக எனது பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் மற்ற நாடுகளில் நடக்கும் உள்ளூர் 'டி-20' லீக்கில் பங்கேற்கும் எனது பயணம் துவங்குகிறது. கடந்த 16 ஆண்டில் மறக்க முடியாத பல்வேறு நினைவுகள், உறவுகளை தந்த, ஆதரவு கொடுத்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி. புதிய பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
221 போட்டி, 187 விக்.,
பிரிமியர் அரங்கில் மொத்தம் பங்கேற்ற 221 போட்டியில் அஷ்வின், 187 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட்டிங்கில் 833 ரன் எடுத்தார்.
காரணம் என்ன
அஷ்வின் வரும் சீசனில் ராஜஸ்தான் அணிக்கு செல்வார், அங்கிருந்து சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவார் என செய்தி வெளியாகின. தவிர, சென்னை அணி கூடுதல் தொகை கொடுத்து பிரவிசை ஒப்பந்தம் செய்தது என இவர் பேசியது சர்ச்சை ஆனது. இதுகுறித்து சென்னை அணி தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அஷ்வின் கழற்றிவிடப் படலாம் என செய்தி வெளியாகின. தற்போது, திடீரென பிரிமியர் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அடுத்து எங்கே
இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், 2024, ஜூன் மாதம் பிரிமியர் அரங்கில் விடைபெற்றார். அடுத்த மாதம் தென் ஆப்ரிக்காவில் நடக்கும் 'எஸ்.ஏ 20' தொடரில் இணைந்தார். இதுபோல அஷ்வின், 'பிக் பாஷ்' (ஆஸி.,), சி.பி.எல்., (வெ. இண்டீஸ்) உள்ளிட்ட தொடரில் பங்கேற்கலாம்.
'திருப்புர-சுந்தரன்'
அஷ்வின் ஓய்வு குறித்து சென்னை அணி வெளியிட்ட செய்தியில்,' சேப்பாக்கம் மைதானத்தின் சொந்தக்காரர். கேரம் பந்து 'திருப்புர-சுந்தரன்'. முதன் முதலில் மஞ்சள் ஜெர்சியுடன் களமிறங்கியது முதல், சுழற்பந்து வீச்சில் உலகளவில் ஆதிக்கம் வரை என, உங்களால் முடிந்த அனைத்தையும் எங்களுக்கு கொடுத்தீர்கள். பாரம்பரியமான சேப்பாக்கம் மைதானத்தை, கோட்டையாக மாற்றி, உயர்ந்து விட்டீர்கள்,' என தெரிவித்துள்ளது.