சிறுவன் தற்கொலைக்கு உதவியது சாட்ஜிபிடி: அமெரிக்க பெற்றோர் குற்றச்சாட்டு!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 16 வயது மகன் தற்கொலைக்கு சாட்ஜிபிடி உதவியதாக, ஓபன்ஏஐ மீது, பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஆடம் ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், சாட்ஜிபிடி உரையாடலில் தீவிரமாக இருந்துள்ளான். ஏப்ரல் மாதம் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவனது சாட்ஜிபிடி உரையாடல்களை பெற்றோர் பார்வையிட்டனர். இதில், தற்கொலைக்கான வழிமுறைகளை சிறுவன் சாட்ஜிபிடி மூலம் தேடியது தெரியவந்தது. இதையடுத்து தங்கள் மகன் தற்கொலைக்கு உதவியதாக, ஓபன்ஏஐ நிறுவனம் மீது சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இது பற்றிய விசாரணை நடந்து வருகிறது. வழக்கை எதிர்கொண்டுள்ள ஓபன்ஏஐ நிறுவனம், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஓபன்ஏஐ பதிவிட்டுள்ளதாவது:
மக்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அவர்களுக்கு உதவுதல் என்ற தலைப்பில், பயனர்கள் சுய-தீங்கு போன்ற முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசும்போது சாட்ஜிபிடி-ஐ மிகவும் பொறுப்பானதாக மாற்றுவதற்கு எங்களது நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சாட்பாட், மக்களை உதவியை நோக்கி வழிநடத்த வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீண்ட உரையாடல்களின் போது அதன் பாதுகாப்புகள் பலவீனமடையக்கூடும். சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் பதில்களை உருவாக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
பயனர்கள் தற்கொலை பற்றிப் பேசும்போது ஏற்படும் உரையாடல்களைத் தணிக்க, அதன் சமீபத்திய ஜிபிடி-5 மாடலுக்கான புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறோம்.
ஒரு நெருக்கடி நிலையை அடைவதற்கு முன், சான்றளிக்கப்பட்ட சிகிச்சையாளர்களுடன் மக்களை நேரடியாக இணைப்பதற்கான வழிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.
சாட்ஜிபிடி மூலம் பயனர்கள் அணுகக்கூடிய உரிமம் பெற்ற நிபுணர்களின் வலையமைப்பு என்பது விவாதத்தில் உள்ள மற்றொரு யோசனையாகும்.
டீனேஜர்களுக்கு, பெற்றோர் தங்கள் குழந்தைகள் சாட்பாட் ஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க, பெற்றோர் கட்டுப்பாடுகளை அனுமதிக்க தொடங்க திட்டமிட்டுள்ளோம். பாதிக்கப்படக்கூடிய பயனர்களை குடும்பத்தினருடனோ அல்லது நெருங்கிய நண்பர்களுடனோ இணைக்கக்கூடிய அம்சங்களையும் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ஓபன்ஏஐ பதிவிட்டுள்ளது.
மேலும்
-
இந்திய பெண்கள் நான்காவது வெற்றி * தெற்காசிய ஜூனியர் கால்பந்தில் அபாரம்
-
மூன்றாவது சுற்றில் சிந்து: உலக பாட்மின்டனில்
-
ஓய்வு பெற்றார் அஷ்வின் * பிரிமியர் கிரிக்கெட்டில் இருந்து...
-
உலக விளையாட்டு செய்திகள்
-
இந்திய கால்பந்துக்கு தடை வருமா * 'பிபா' எச்சரிக்கை
-
சுப்மன் கில் 'நம்பர்-1': ஒருநாள் போட்டி தரவரிசையில்