தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி; இன்றும் அதிமுக பக்கம் தான் திருமாவின் பார்வை!

26

திண்டிவனம்: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று (ஆகஸ்ட் 27), "ஆர்எஸ்எஸ், பாஜவின் கட்டுப்பாட்டிற்கு அதிமுக சென்று விட்டது என்பது கவலையளிக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்" என தெரிவித்தார்.


நிருபர்: அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன தவறு என்று எல்.முருகன் கூறியுள்ளார். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

திருமா பதில்: அதிமுகவினர் ஆர்எஸ்எஸ்- பாஜவின் கட்டுப்பாட்டில் போய்விட்டார்கள் என்பதற்கு இந்த கேள்வியை ஒரு சான்றாக இருக்கிறது. அதிமுகவை ஈவெரா வழிவந்த திராவிட இயக்கம்தான் என்று தமிழகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த இயக்கத்தை வீர சாவர்க்கர் வழி வந்தவர்கள் வழிநடத்தலாம். அப்படி வழி நடத்தினால் ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது கவலை அளிக்கிறது.


அதிமுக பொதுச்செயலாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தவறா? தவறு இல்லையா என்பதை அதிமுக தலைவர்கள் மக்களுக்கு விளக்கம் வேண்டும். ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் வலிமை பெறுவதற்கு, அதிமுக போன்ற கட்சிகள் துணை போவது கவலை அளிக்கிறது.


அதிமுகவை விழுங்குவதற்கு அந்த இயக்கம் பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இது அதிமுகவிற்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்து என்பது இல்லை. தமிழகத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தமிழக மக்கள் குறிப்பாக அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement