கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு குண்டு மிரட்டல்

கோவை: கோவையிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு தொட ர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, கடந்த 26ம் தேதி, தண்டுமாரியம்மன் கோவில் எதிரிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு 27 ம் தேதி வந்த இ-மெயிலில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இரண்டாவது நாளாக நேற்று மீண்டும், கலெக்டர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல், இ-மெயில் வந்தது. அதில், கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், கலெக்டர் அலுவலகம், நீதிமன்ற வளாக பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.
கோவை அரசு அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால்,அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் திருப்பூர் கலெக்டர் அலுவலக இ - மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மாநகர போலீஸ் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் ராபின் உதவியுடன் சோதனை நடத்தினர்.
கலெக்டர் அலுவலகத்தில் நல்லுார் உதவி கமிஷனர் தையல் நாயகி தலைமையிலும், மாநகராட்சிஅலுவலகத்தில் கே.வி.ஆர். நகர் உதவி கமிஷனர் ஜான் தலைமையிலும் இந்த சோதனை நடந்தது.
சோதனையில் எங்கும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிந்தது.
நீலகிரி ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மற்றும் குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது,' என, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு இ--மெயில் வந்தது. ஊட்டி போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களுடன், ராஜ்பவனுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.
குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியிலும் சோதனை நடந்தது. ஒரு மணி நேர சோதனைக்கு பின் புரளி என தெரிய வந்தது.
மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளான ராணுவ பயிற்சி கல்லுாரி, ராஜ்பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
போலி இ-மெயில் ஐ.டி., கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி கூறுகையில், ''போலியாக இ-மெயில் ஐ.டி. உருவாக்கி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
போலி முகவரியில் இ-மெயில் அனுப்பியவர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றனர்.
மேலும்
-
இந்தியாவை சர்வதேச விளையாட்டு மையமாக மாற்ற நடவடிக்கை; பிரதமர் மோடி
-
பேச்சுவார்த்தைக்கு புடின் கட்டாயம் வர வேண்டும்; அழைக்கிறது ஐரோப்பிய யூனியன்
-
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4 மாதங்களில் இல்லாத உச்சம்
-
அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் தமிழகம் முதலிடம் என முதல்வர் பெருமிதம்: தொழில்துறையில் நாட்டின் வேலைவாய்ப்பு 5.92% உயர்வு
-
சென்னையில் தரவு மையம் 'டெக்னோ' நிறுவனம் துவக்கம்
-
ஓய்வூதிய திட்டங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு உயர்நிலைக்குழு அமைப்பு