உத்தராகண்டில் 2 இடங்களில் மேகவெடிப்பு; சிக்கி தவிக்கும் குடும்பங்கள்; மீட்பு பணி தீவிரம்

1

டேராடூன்: உத்தராகண்டில் சாமோலி, ருத்ரபிரயாக் ஆகிய இரண்டு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.


@1brஉத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த 5ம் தேதி, மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உத்தராகண்டில், இதுவரை 270க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

மேலும் மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது, சாமோலி, ருத்ரபிரயாக் ஆகிய இரண்டு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமாவோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருப்பதாவது:

ருத்ரபிரயாக், சாமோலி பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாக இடிபாடுகள், சில குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது. மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மீட்பு நடவடிக்கைகளை திறம்பட நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளை வழங்கியுள்ளேன். அனைவரின் பாதுகாப்பிற்காகவும் இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

Advertisement