கணிப்புகளை பொய்யாக்கி 7.6 % வளர்ச்சி பெற்ற இந்திய ஜிடிபி

புதுடில்லி: நடப்பு 2025 2026 ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி கணிப்பை தாண்டி 7.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளை தாண்டி இந்த வளர்ச்சியை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஜிடிபி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிக்கிறது. இது நல்ல வளர்ச்சியுடன் இருந்தால் தான், பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக அர்த்தம். தற்போதைய நிலவரம் பற்றி தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் கடந்த ஆண்டு 6.5 சதவீதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி பெற்றது. ஆனால், 7.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இதில் சேவைத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம்.
முதல் காலாண்டில் இத்துறை 9.3 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6.8 சதவீதம் மட்டுமே வளர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயம் மற்றும் அதனை சார்ந்த பணிகள் 3.7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த காலாண்டு பெற்ற 1.5 சதவீத வளர்ச்சியை விட அதிகம் ஆகும்.
உற்பத்தி துறையும் 7.7 சதவீதம் மற்றும் கட்டுமானத்துறை 7.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேநேரத்தில் சுரங்கம் மற்றும் குவாரி ஆகிய துறைகள் 3.1 சதவீதமும், மின்சாரம், காஸ் குடிநீர் சப்ளை ஆகிய துறைகள் 0.5 சதவீதம் மட்டும் வளர்ச்சி பெற்றுள்ளது.













