தெற்காசிய கால்பந்து: இந்தியா சாம்பியன்

திம்பு: தெற்காசிய யூத் கால்பந்தில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது.
பூடானில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் 3 போட்டியில் நேபாளம், வங்கதேசம், பூடானை வென்றது இந்தியா. இரண்டாவது கட்டமாக பூடானை 5-0 என வென்றது. நேற்று தனது 5வது போட்டியில் இந்தியா, நேபாள அணிகள் மோதின.
இந்திய அணிக்கு நிரா சானு (5வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, பியர்ல் (15, 43) 2 கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்தியாவுக்கு திவ்யானி (79, 90+2) தன் பங்கிற்கு 2 கோல் அடித்து கைகொடுத்தார்.
முடிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சாம்பியன் உறுதி
இதுவரை அனைத்து அணிகளும் 5 போட்டியில் பங்கேற்றன. இன்னும் ஒரு போட்டி மட்டும் மீதமுள்ளன. இந்நிலையில் பட்டியலில் இந்தியா 15 புள்ளியுடன் முதலிடத்தை உறுதி செய்தது. அடுத்து வங்கதேசம் (10), நேபாளம் (3), பூடான் (1) உள்ளன. வங்கதேச அணி, தனது கடைசி போட்டியில் இந்தியாவை (ஆக. 31) சந்திக்கிறது.
இதில் வென்றாலும் 13 புள்ளி மட்டுமே பெற முடியும். இதனால் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், தெற்காசிய கால்பந்தில் 2018, 2019க்குப் பின், இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது.

Advertisement