ஆசிய ஹாக்கி: இந்தியா அபாரம் * சீனாவை வீழ்த்தியது

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. கேப்டன் ஹர்மன்பிரீத் 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.
பீஹாரின் ராஜ்கிர் நகரில் ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன்நேற்று துவங்கியது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இருஇடம் பிடிக்கும் அணிகள், 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறும். இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள், பைனலில்(செப். 7)மோதும்.
இந்தியா நம்பிக்கை
உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ளஇந்திய அணி 'ஏ' பிரிவில், சீனா, ஜப்பான் (ஆக. 31), கஜகஸ்தான் (செப்.1) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.நேற்று தனது முதல் போட்டியில் 23வது இடத்திலுள்ள சீனாவை சந்தித்தது.
2வது நிமிடம் ஷிகாவோ ஒரு கோல் அடிக்க சீனா 1-0 என முந்தியது. பின் சுதாரித்த இந்திய அணிக்கு 18, 20 வது நிமிடத்தில் ஜுக்ராஜ் சிங், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளில் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி துவங்கிய 3வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் (33) மற்றொரு கோல் அடித்தார்.
சீனா எழுச்சி
மறுபக்கம் சீன அணிக்கு பென்ஹல் சென் (34) கோல் அடித்தார். 38வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பில், பந்தை கோல் போஸ்ட் மீது அடித்து வீணடித்தார் ஹர்மன்பிரீத் சிங். சீன தரப்பில் ஜிஷெங் (40) ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமன் ஆனது.
போட்டியின் 47 வது நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து உதவினார். இது ஹர்மன்பிரீத் அடித்த 'ஹாட்ரிக்' கோல் ஆனது. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் போராடி, 'திரில்' வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு நேற்று கிடைத்த 11 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளில் 4 ல் மட்டுமே கோல் அடிக்கப்பட்டது ஏமாற்றமாக இருந்தது.
ஜப்பான் கலக்கல்
நேற்று நடந்த மற்றொரு ('ஏ' பிரிவு) போட்டியில் ஜப்பான் ('நம்பர்-18'), கஜகஸ்தான் ('நம்பர்-81') அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 7-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பான் (3), இந்தியா (3) அணிகள் 'டாப்-2' இடத்தில் உள்ளன.
மேலும்
-
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
-
கழிவு நீரால் மக்கள் அவதி
-
'நிதி பற்றாக்குறை இலக்கில் 30% எட்டப்பட்டது'
-
ரூ.8,700 கோடி 'க்ரோ' ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி
-
இந்திய பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை நம்பியில்லை: தேசிய தென்னை நார் கூட்டமைப்பு கருத்து
-
'ஓமன் நாட்டுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்'