ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி; சீனாவை வென்று சாதித்தது இந்தியா!

பாட்னா: பீஹார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்த ஆண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், சீனாவை 4:3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தார்.
பீஹாரின் ராஜ்கிர் நகரில், ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் இன்று துவங்கியது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறும். இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள், வரும் செப். 7ல் நடக்கவுள்ள பைனலில் மோதும்.
இந்நிலையில் இன்று நடந்த லீக் போட்டியில், ஏ பிரிவில் இருக்கும்இந்தியா, சீனா அணிகள் மோதின. ஹர்மன்பிரீத் சிங் தலைமையில், இந்திய அணியில் மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், விவேக் சாகர் பிரசாத், ஹர்திக் சிங், ராஜ் குமார் பால், மன்தீப் சிங், தில்பிரீத் சிங் உள்ளிட்டோர் விளையாடினர்.
இந்தப் போட்டியில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 20, 33, 47வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். சீன அணியில் 12, 35, 42வது நிமிஷங்களில் ஸ்கோர் செய்தார்கள். சீனாவை 4:3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி த்ரில் வென்றது.

