வங்க மொழி மக்களை எதிர்க்க வேண்டாம்; பா-.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தல்

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பலர் ஊடுருவி வருவதால், நம் நாட்டில் போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது. நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள அவர்களை உடனடியாக வெளியேற்றவும் அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக, மேற்கு வங்கம், அசாம், மணிப்பூர், மிசோரம் என எல்லையோர கிராமங்களில் ஊடுருவியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை, மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
மொழி பிரிவினை
மேற்கு வங்கத்தில், வங்க மொழி பேசுபவர்களை வெளியேற்றும் பா.ஜ.,வின் செயலுக்கு மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'நாடு முழுதும் உள்ள வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தை பா.ஜ., கட்டவிழ்த்து விடுகிறது.
'அக்கட்சி, வங்க அடையாளத்தை அழித்து வருகிறது. வங்க மொழி பேசும் முஸ்லிம்கள், நம் நாட்டின் குடிமகனாக இருந்தாலும், அவர்களை பா.ஜ., வெளியாட்களாக நடத்துகிறது' என, அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்த சூழலில், 'வங்க அடையாளத்தை அழிக்க வேண்டாம்' என, பா.ஜ.,வை, ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தியுள்ளது. சித்தாந்த ரீதியாக அக்கட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., மேற்கு வங்கத்தில், வங்க மொழி பேசுவோர் மீதான தாக்குதலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. 'ஊடுருவல் நடவடிக்கையின் போது, வங்கமொழி பேசும் இந்தியர்களை குறிவைக்க வேண்டாம்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிருப்தி
இது குறித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஒருவர் வங்க மொழி பேசுவதால், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என அர்த்தமல்ல. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான இந்திய குடிமக்கள் வங்க மொழி பேசுகின்றனர்; இந்த நிலத்தில் ஆழமான வேர்களை அவர்கள் கொண்டுள்ளனர்.
' இந்த மக்கள் துன்புறுத்தப்படவோ அல்லது நியாயமற்ற முறையில் நடத்தப்படவோ கூடாது. இது அரசியலைப் பற்றியது மட்டுமல்ல; அடையாளத்தையும் வரலாற்றையும் மதிப்பது' என்றார்.
வங்க மொழி மக்களை ஆர்.எஸ்.எஸ்., மதிப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முதல் கிளை, 1939ல் கொல்கட்டாவின் மணிக்தலாவில் துவங்கப்பட்டது. மாநிலம் முழுதும், 4,500க்கும் மேற்பட்ட உள்ளூர் பிரிவுகளை ஆர்.எஸ்.எஸ்., நடத்துகிறது.
பா.ஜ.,வின் முன்னோடியாக இருந்த ஜன சங்கத்தின் நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும் வங்காளத்தில் பிறந்தவர்.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும், கொல்கட்டாவில் உள்ள எம்.பி., தொகுதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தளவுக்கு நெருக்கம் உள்ள மேற்கு வங்கத்தில், வங்க மொழி பேசுபவர்கள் மீது பா.ஜ., மொழி ரீதியான தாக்குதல் நடத்துவது ஆர்.எஸ்.எஸ்.,சை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கலாசார தொடர்பு
'வங்க அடையாளம் ஒரு பிரச்னையல்ல; அது ஓர் பலம். பா.ஜ., அதை தொடர்ந்து புறக்கணித்தால், மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்' என, ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தி வருகிறது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதை விரும்பும் ஆர்.எஸ்.எஸ்., அங்கு வலுவான கலாசார தொடர்பை மேற்கொள்ள நினைக்கிறது. மேற்கு வங்கத்தில் ஓட்டுகளை வெல்வதை விட இதயங்களை வெல்வது மிக முக்கியம் என கருதும் அந்த அமைப்பு, அதற்கேற்றவாறு பா.ஜ.,வை தயார்படுத்தி வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
மேலும்
-
நான்கரை மாதத்தில் பிறந்த 580 கிராம் குழந்தை; அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு; வங்கதேச தாய் ஆனந்த கண்ணீர்
-
'முறைகேடு நடக்கவில்லை'
-
மக்களிடம் வரி வசூலிக்காமல் ஆட்சி நடத்திய புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் அமைச்சர் ரகுபதி பெருமிதம்
-
தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் வரை துாக்கம் இல்லை: பழனிசாமி சூளுரை
-
காலவரையற்ற உண்ணாவிரதம்
-
'வாசிப்பு தானாக வசப்பட்டு விடாது முயற்சி எடுக்கவேண்டும்' கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேச்சு