வெறுப்பு அரசியலை துாண்டும் ராகுல்; மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்

குவஹாத்தி: பீஹாரில், 'இண்டி' கூட்டணி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி அவதுாறாக பேசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''வெறுப்பு அரசியலை துண்டும் ராகுல், மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, வலியுறுத்தி உள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை 'இண்டி' கூட்டணியின் அங்கமாக போட்டியிடுகின்றன.

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர், 'வாக்காளர் உரிமை யாத்திரை' என்ற பெயரில் பீஹார் முழுதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தர்பங்கா மாவட்டத்தில், இண்டி கூட்டணியின் வாக்காளர் உரிமை யாத்திரை சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய காங்., நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார்.

மேடையில், ராகுல், பிரியங்கா, தேஜஸ்வி ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

பீஹாரில், இண்டி கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் காங்கிரசார் பேசி உள்ளனர். இதை வன்மை யாகக் கண்டிக்கிறேன்.

நாட்டில் வெறுப்பு அரசியலை காங்., தலைவர் ராகுல் துவங்கி உள்ளார். இது, நம் பொது வாழ்க்கையை சீரழிக்கும். அவரது எதிர்மறை அரசியல் நாட்டை மேல்நோக்கி கொண்டு செல்லாது. இது போன்று இழிவாக பேசுவது காங்., தலைவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

சோனியா, ராகுல், மணி சங்கர் அய்யர், திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ், ரேணுகா சவுத்ரி போன்ற காங்., தலைவர்கள், பிரதமர் மோடியை பற்றி பலமுறை அவதுாறாக பேசி உள்ளனர். இதனால் அவர்களுக்கு கிடைத்தது என்ன?

இப்படி பேசினால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விடுவரா? இப்படி கீழ்த்தரமாக பேசி, பல முறை மக்களிடம் காங்., தலைவர்கள் வாங்கிக் கட்டி கொண்டனர். இருந்தும், திருந்தவில்லை. பிரதமர் மோடியை எவ்வளவு அவதுாறு செய்கின்றனரோ, அந்தளவுக்கு தாமரை மலர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


பின்னணியில் பா.ஜ.!



பிரதமர் மோடியை காங்., நிர்வாகி அவதுாறாகப் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பவர், பா.ஜ., உறுப்பினர். அவர் தான், காங்., உறுப்பினர் போல உடையணிந்து இழிவாக பேசி உள்ளார். இந்த பின்னணியில், பா.ஜ., இருக்கிறது. இண்டி கூட்டணியின் செல்வாக்கை தடுக்க இது போல அக்கட்சி சதி செய்கிறது.


பவன் கெரா


மூத்த தலைவர், காங்.,



@block_B@ பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல் பிரதமர் மோடியை அவதுாறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாட்னாவில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர். பதிலுக்கு, காங்கிரசாரும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது இரு தரப்பும் கட்சி கொடிக்கம்பங்களால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். மேலும், கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.block_B

Advertisement