இட ஒதுக்கீடு பிரச்னை: ஜராங்கே போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை

மும்பை : மஹாராஷ்டிராவில், மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவங்கினார். அவரது ஆதரவாளர்களின் படையெடுப்பால், மும்பை நகரம் ஸ்தம்பித்தது.


மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூடடணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள மராத்தா சமூகத்தினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.



தடை




மராத்தா சமூகத்தினர் அனைவரையும் ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மஹா., அரசை அவர் வலியுறுத்தி வந்தார்.


இதையடுத்து, 2018ல், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.


இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்துக்கு தடை விதித்தது. இதனால், அதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.


இந்நிலையில், இடஒதுக்கீடு பிரச்னையை மீண்டும் கையில் எடுத்த மராத்தா இடஒதுக்கீடு இயக்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான மனோஜ் ஜராங்கே, மும்பையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அவருக்கு காலை 9:00 முதல் 6:00 மணி வரை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.



உண்ணாவிரதம்



இதற்காக, தன் சொந்த ஊரான ஜால்னா மாவட்டம் அந்தர்வாலி கிராமத்தில் இருந்து கடந்த 27ம் தேதி புறப்பட்ட ஜராங்கே, நேற்று மும்பை வந்தடைந்தார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மும்பை வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


திட்டமிட்டபடி, ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய ஜராங்கே, அதை முடிக்காமல் தொடர்ந்தார். மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்தார்.




இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் மும்பை வர முடிவு செய்தோம்; வந்துவிட்டோம். மாநில அரசும், நீதிமன்றமும் எங்கள் போராட்டத்தை அனுமதிக்கும் என நம்புகிறோம். மஹா., அரசு எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.



“எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மராத்தியர்களின் கோபத்துக்கு முதல்வர் ஆளாக வேண்டாம் என எச்சரிக்கிறேன். நீங்கள் என்னை சுடலாம்; அல்லது சிறையில் அடைக்கலாம். ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கிருந்து நகரமாட்டேன்,” என்றார்.



காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜராங்கே முன்னெடுத்ததை அடுத்து, மேலும் பல ஆதரவாளர்களும், மராத்தா சமூகத்தினரும் ஆசாத் மைதானத்தை நோக்கி குவிய துவங்கினர். எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் அப்பகுதிக்கு விரைந்தனர்.


பேச்சுக்கு தயார்



ஏராளமான வாகனங்களில் அவர்கள் சென்றதால், மும்பை நகரின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை முடிந்து வீடு திரும்பியவர்களும், மாணவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.


மனோஜ் ஜராங்கேவின் காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்து ஆசாத் மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இடஒதுக்கீடு தொடர்பாக ஜராங்கேவிடம் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக மஹா., அரசு தெரிவித்துள்ளது.

Advertisement