காரைக்காலில் விநாயகர் சிலை ஊர்வலம்; சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன் பங்கேற்பு

காரைக்கால் : காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 50 விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஏழை மாரியம்மன் கோவில், நேருநகர், மதகடி, தலத்தெரு, வலத்தெரு உள்ளிட்ட 50 இடங்களில் கடந்த 27ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 3 நாட்களுக்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

நேற்று விநாயகர் சிலைகளை கடலில் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மாவட்டம் முழுதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மதியம் புதிய பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஏழை மாரியம்மன் கோவில் முன் வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. பின் பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன் ஆகியோர் டிராக்டரில் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகர தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். காரைக்கால் மேடு கடற்கரையில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

அதே போல், இந்து முன்னணியினர் கிளிஞ்சல் மேட்டில் இருந்து சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைத்தனர். சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுசன்யா தலைமையில் எஸ்.பி., முருகையன் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement